குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைத்தளச் சேவை பெரிதும்
உதவிகரமாக உள்ளது. இந்த சேவையின் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்
போன வாகனத்தை போலீஸார் மிக அளிதாக மீட்க முடிந்திருக்கிறது.
38 லட்சம் ஆவணங்கள் கணினிமயம்
காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும், குற்றம்
மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைத்தளத் திட்டம் (சிசிடிஎன்எஸ்),
அனைத்து மாநில காவல்துறைகளிலும் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இதன்படி,
குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளின் தகவல்கள், காணாமல் போனவர்கள் மற்றும்
அடையாளம் தெரியாத சடலங்கள் போன்ற தகவல்கள் கணினிமூலம்
தொகுக்கப்படுகின்றன. தமிழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் பதிவான அனைத்து
வழக்குகள், பெறப்பட்ட புகார்களைப் பதியும் பணி கடந்த ஆண்டு மார்ச்
மாதத்தில் தொடங்கப்பட்டது. அதில் இதுவரை 38 லட்சம் வழக்கு ஆவணங்கள்
பதிவுசெய்யப்பட்டுள்ளன.
வாகனத்திருட்டு வழக்குகள்…
இத்திட்டத்தின்படி, மாநிலத்தில் உள்ள எந்தவொரு காவல்நிலையத்திலும்,
அவ்வப்போது பெறப்படும் புகார்களின் விவரங்கள் கணினியில் பதிவு
செய்யப்படுகின்றன. அவை உடனுக்குடன், சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவண
காப்பகத்தின் மாநில தகவல் மைய சர்வரில் பதிவாகிவிடுகின்றன. இதற்காக,
அனைத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு முதல்
மாவட்டந்தோறும் பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது. மாநிலத்தின் ஏதோ ஒரு
மூலையில் உள்ள காவல்நிலைய கணினியில் பதிவுசெய்யப்படும் எந்த வகையான
புகாரையும், வேறிடத்தில் உள்ள காவல்நிலையத்தவரும், உயரதிகாரிகளும்
பார்க்கும் வகையில் அனைத்து காவல்நிலையங்களும் வலைப்பின்னலால்
ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனய இந்த வசதியால் பல்வேறு வழக்குகள் விரைவாக
முடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வாகனத்திருட்டு
வழக்குகளுக்கு வெகு வேகமாக தீர்வு கிடைப்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து மாநில குற்ற ஆவணக் காப்பக வட்டாரங்கள் கூறியதாவது:-
10 ஆண்டுக்கு முன் இறந்தவரின்…
சிசிடிஎன்எஸ் திட்டத்தில் வாகனத் திருட்டு வழக்குகள் வெகு விரைவாக
கண்டறியப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நூற்றுக்கணக்கான
வாகனங்கள் இச்சேவையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே நாளில் 14 வாகன
வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.
உதாரணத்துக்கு, கடந்த 2004-ம் ஆண்டில் காணாமல்போன ஒரு இருசக்கர
வாகனத்தினை 10 ஆண்டுகள் கழித்து போலீஸார் சமீபத்தில் சிசிடிஎன்எஸ் வசதி
மூலம் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டையில் வாகனவிபத்தில் உயிரிழந்த
ஒருவரின் வாகனம் (டிஎன்63ஒய் 7481) அது. சமீபத்தில் மதுரையில்
கருப்பாயூரணி போலீஸார் வாகனச் சோதனை நடத்தியபோது அது திருட்டு வாகனம்
எனத் தெரியவந்தது. அந்த வாகனத்தின் எஞ்சின், சேஸிஸ் எண்களை சிசிடிஎன்எஸ்
வசதி மூலம் சரிபார்த்தபோது, உண்மை தெரியவந்தது.
வடமாவட்டங்களை விட தென்மாவட்ட போலீஸார் இந்த சேவையைச் சிறப்பாக
பயன்படுத்தி வருவதைத் தொடர்ந்து அனைத்து காவல்நிலையங்களுக்கும்,
இச்சேவையை நன்றாக பயன்படுத்திக் கொள்ளக் கூறி சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வசதி…
சிசிடிஎன்எஸ்-ல் பொதுமக்கள் பல்வேறு சேவைகளை ஆன்லைன்
(eservices.tnpolice.gov.in) வழியாகவே பெறமுடியும். அந்த இணையதளத்தில்
பொதுமக்கள், தங்களது எல்லாவிதமான புகார்களைப் பதிவு செய்யலாம்.
அவர்களுக்கு உடனடியாக ஒரு ரகசிய ஒப்புகை எண் வழங்கப்படும். அதற்கடுத்த
ஓரிரு தினங்களுக்குள் அவர்களுக்கு அது தொடர்பான பதில் இமெயலிலோ,
செல்போன் மூலமாகவோ அந்தந்த காவல்நிலையத்தில் இருந்து அனுப்பப்படும்.
தங்களது புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அவ்வப்போது அவர்கள்
பார்த்துத் தெரிந்துகொள்ளமுடியும்.
40 சதவீதம் 'செல்போன்' புகார்கள்…
எல்லா காவல்நிலையத்திலும் இந்த வசதியின் கீழ் பெறப்படும் புகார்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று தலைமையகத்தில் கண்காணிக்கப்படுகிறது.
ஒரு மாதத்துக்கு சராசரியாக 700 ஆன்லைன் புகார்கள் வருகின்றன. அவற்றில்
செல்போன் தொடர்பாக மட்டும் 40 சதவீதம் புகார்கள் வருகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பழைய வாகனம் அல்லது செல்போன் வாங்கும் முன்…
பழைய இரு சக்கர வாகனங்களையோ, செல்போன்களையோ வாங்குவதற்கு முன்பு
பொதுமக்கள், இந்த இணையதளத்தில், அதற்கான பிரத்யேக வசதி (check before
buying) செய்யப்பட்டுள்ள இடத்தில், வாகனப்பதிவெண், எஞ்சின் எண் மற்றும்
செல்போனில் உள்ள 15 இலக்க ஐஎம்இஐ எண்-ஐ பதிவு செய்தால், அவை காணாமல்
போனதாக வேறெந்த காவல்நிலையத்தில் புகார் பெறப்பட்டிருந்தால், அது
திருட்டுப் பொருள் (stolen) என்பதைக் கண்டறியமுடியும்.