NEW POST

Pages

Monday, March 30, 2015

முடிந்தது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சகாப்தம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இனி செயல்பாட்டிற்குக் கிடைக்காது. இதற்குப் பதிலாக, விண்டோஸ் 10 வெளிவரும்போது, உடன் கிடைக்கும் பிரவுசரே முதன்மை இடம் பெறும். தற்போது ஸ்பார்டன் (Spartan) என அழைக்கப்படும் இந்த பிரவுசர், இதே பெயருடனோ அல்லது புதிய பெயருடனோ நுகர்வோருக்குக் கிடைக்கும். சென்ற வாரம், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற, மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்ந்த வர்த்தக மாநாட்டில், இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் கிறிஸ் கபோஸ்ஸிலா இதனைத் தெரிவித்தார். "விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட இருக்கும், நுகர்வோருக்கான பிரவுசருக்கு என்ன புதிய பெயரை அளிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்" என்று அறிவித்தார். எனவே, இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற பெயரில் நுகர்வோருக்கான பிரவுசர் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வந்த வரலாறு:இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.0:1995 ஆம் ஆண்டில், விண்டோஸ் 95 சிஸ்டத்துடன், அதன் ஒரு பகுதியாக வெளிவந்தது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.5: முதல் பதிப்பு வெளியாகி, ஆறு மாதங்களுக்குப் பின் விண்டோஸ் என்.டி. சிஸ்டத்திற்காகத் தரப்பட்டது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 2.0: 1995 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் விண்டோஸ் 95 மற்றும் வின்டோஸ் என்.டி. சிஸ்டங்களுக்கானதாய் வெளியிடப்பட்டது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 3.0: ஆகஸ்ட், 1996ல் விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் தரப்பட்டது. இந்தப் பதிப்பில் தான் இன்டர்நெட் மெயில் 1.0 மற்றும் விண்டோஸ் அட்ரஸ் புக் அறிமுகப்படுத்தபட்டது.பதிப்பு 4.0: செப்டம்பர் 1997ல் வெளியாகி, விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் அப்டேட் ஆக வழங்கப்பட்டது. பின்னர் விண்டோஸ் 98 சோதனைப் பதிப்புடன் தரப்பட்டது.பதிப்பு 5: மார்ச், 1999ல் வெளியானது. விண்டோஸ் 98 சிஸ்டத்தின் இரண்டாவது எடிஷனுடன் தரப்பட்டது. விண்டோஸ் 3.1 மற்றும் விண்டோஸ் என்.டி. 3 ஆகியவற்றுடன் வந்த இறுதி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதுதான். பதிப்பு 5.5.: ஜூலை 2000ல், விண்டோஸ் மில்லினம் (விண்டோஸ் மி) சிஸ்டத்துடன் கிடைக்கப் பெற்றது. பதிப்பு 6.0: ஆகஸ்ட் 2001ல், அதே மாதம் வந்த விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்புடன் வெளியானது. இதில் தனிநபர் மற்றும் சில பாதுகாப்பு அம்சங்கள் முக்கியமாக மேற்கொள்ளப்பட்டன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தனியாகத் தரப்பட்டது இதுவே இறுதியாகும். பின்னர் இந்த பிரவுசர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்தே தரப்பட்டது. இந்த வெளியீட்டில் தான் முதன் முதலில், சிஸ்டத்தின் செயல் வேகம் தாக்கப்பட்டு குறைக்கப்பட்டது. பின்னர், 2004ல், அமெரிக்காவின் கம்ப்யூட்டர் எமெர்ஜன்சி குழு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள குறைபாடான குறியீடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டு, ஹேக்கர்கள், அதில் தரப்பட்டும் பாஸ்வேர்ட்களைத் திருட முடியும் என அறிவித்த போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இமேஜ், அதன் வாடிக்கையாளர்களின் மனதில் சரிந்தது. குறைகளுக்கான அப்டேட் பைல்களை, மைக்ரோசாப்ட் தொடர்ந்து வெளியிட்ட போதும், மீண்டும் பழைய புகழை இன்டர்நெட் எக்ஸ்புளோரரால் பெற இயலவில்லை.பதிப்பு 7.0:
அக்டோபர் 2006ல் இது வெளியானபோது, பெரிய அளவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாற்றங்களைக் கொண்டிருந்தது. இது விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தில் இணைத்துத் தரப்பட்டது. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை, சர்வீஸ் பேக் 2 கொண்டு மேம்படுத்தி இருந்தால், அதனுடனும் தரப்பட்டது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8.0: 2009 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் வெளியானது. இதற்கு முன் பொதுமக்களுக்குச் சோதனை முறையில் இந்த பிரவுசர் பதிப்பு தரப்பட்டது. விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கிய கடைசி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு இதுதான்.பதிப்பு 9.0: மார்ச் 2011ல் வெளியானது. விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்காத முதல் மைக்ரோசாப்ட் பிரவுசர் இதுதான்.பதிப்பு 10.0 : 2012ல் அக்டோபரில் வெளியானது. விண்டோஸ் 7, 2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. இந்த வெளியீடு முற்றிலும் புதிய கட்டமைப்பில் வெளியானது. "நீங்கள் அன்புடன் வெறுத்த பிரவுசரிலிருந்து நாங்கள் விலகி வந்து, முற்றிலும் புதிய பிரவுசரை உங்களுக்கு வழங்குகிறோம்" என மைக்ரோசாப்ட் அறிவித்தது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11.0: 2013 அக்டோபரில் வெளியானது. விண்டோஸ் 8.1 அப்போது விண்டோஸ் 8க்குப் பதிலாக வெளியிடப்பட்டது.ஒரு சில நிறுவனங்கள் தங்கள் வர்த்தக இணைய தளங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே இயங்கும் வகையில் அமைத்திருப்பார்கள். இவர்களுக்கு மட்டும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடர்ந்து கிடைக்கும். இதற்குப் பதிலாகத் தற்போது வடிவமைக்கப்பட்டு, ஸ்பார்டன் என்ற குறியீட்டுப் பெயருடன் கிடைக்கும் சோதனை அடிப்படையில் கிடைக்கும் பிரவுசர், முடிவில் இதே பெயரில் வரலாம்; அல்லது புதிய பெயருடன் அறிமுகப்படுத்தப்படலாம். எந்தப் பெயரில் வந்தாலும், மைக்ரோசாப்ட் தன் பிரவுசரை முற்றிலும் புதிய கட்டமைப்பில் கொண்டு வருகிறது என்பது உண்மை.ஸ்பார்டன் பிரவுசர் புதிய வகை இணையச் செயல்பாட்டிற்கான, புதிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டம் ஒரு சர்வீஸ் செயலியாகத் தரப்பட இருப்பதால், இந்த பிரவுசரையும் அதே அமைப்பில் உருவாக்கி வருகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைந்து செயல்பட முடியாது. எனவே, நிறுவன வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண் 8.1 சிஸ்டங்களில் இயங்கும் வகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 தொடர்ந்து கிடைக்கும். விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, விண் 7 மற்றும் விண் 8.1 பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாக மைக்ரோசாப்ட் தர இருப்பதால், தனிநபர் பயன்பாட்டிற்கு இவற்றைப் பயன்படுத்துவோருக்கு, ஸ்பார்டன் பிரவுசர் அதே பெயரில் அல்லது புதிய பெயரில் கிடைக்கும்.

No comments:

Designed By Blogger Templates