கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கியில் காத்திருக்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். 'உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?" "வசதி இருந்தா நாங்க எதுக்குசார் கடன் கேட்டுவர்றோம்?"- இது மாணவனின் பதில். கடைசிவரை மாணவர்களுக்குப் போராட்டம் மட்டுமே மிஞ்
சுகிறது. இப்படிக் கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.
அவரிடம் பேசினோம். " கல்விக் கடன் வாங்குவதற்காக மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னுதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். கல்விக் கடனைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்கள்தான் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று பொதுத் திட்டம். மற்றொன்று தனிப்பட்ட கடன் திட்டம்.
பொதுத் திட்டமானது மதிப்பெண் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கடன் திட்டம். கல்விக் கடன் வாங்கும் எல்லோருமே பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களைச் சொல்கிறேன். கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றால், வங்கி மேலாளர்கள், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் நிராகரிக்க முடியும். நிராகரிப்பதற்கான காரணங்களையும் எழுத்து மூலம் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், மாணவர்கள் வங்கியின் தலைவரிடமே மேல் முறையீடு செய்யலாம். கல்விக் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்தவேண்டியக் கட்டாயம் இல்லை. அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தொழிற்கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிக்கான மானியமும் உண்டு. இதற்கான விண்ணப்பத்தைக் கல்விக் கடனில் முதல் தவணை பெறும்போதே, வருமானச் சான்றிதழை இணைத்துக் கொடுத்துவிட வேண்டும். பெற்றோர்களின் எந்தவொரு தனிப்பட்ட கடனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக் கடனுக்கும் சம்பந்தமில்லை.
ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். எங்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்.(www.eltf.in )
எங்கள் அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறோம். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். நாங்களே தேடிவந்து உதவிகள் செய்து தருவோம்" என்கிறார்.
கல்வி கற்க இனி என்ன கவலை
Source: http://www.thaikkal.com/
No comments:
Post a Comment