வெளிநாட்டில் வேலையா? எங்கே, எங்கே?' என்று கேட்டு ஓடியது அந்தக் காலம். வெளிநாட்டில் வேலை என்றாலே சந்தேகத்தோடு ஒதுங்குவது இந்தக் காலம். காரணம், வெளிநாட்டு வேலை என்று நம்பிப் போய், அடியும், மிதியும் பட்டு ஊருக்குத் திரும்புகிற அனுபவம் பலருக்கு. ஆனாலும், முறையான வழியில் உஷாராகப் போகிறவர்கள் கைநிறைய பணத்தோடு திரும்பவே செய்கிறார்கள்.
வெளிநாட்டு வேலைக்குத் தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது? யாரிடம் சென்று சரியான தகவல் பெறுவது? உண்மையான முகவர் என்பவர் யார்? அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது? என்கிற கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்தபோதுதான் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கே.இளங்கோவனைச் சந்தித்தோம். அவரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டோம். தெளிவான விளக்கத்தைத் தந்தார் அவர்.
"தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக, வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு உதவி செய்து வருகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் நம்பகமான சான்றிதழுடன் இந்நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்வதற்கான முக்கிய நோக்கம், அதிக சம்பளம் கிடைக்கும்; புது கலாசார சூழலில் வேலை செய்ய முடியும் என்பதால்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யும் நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா போன்றவை. இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பது மட்டும் காரணம் கிடையாது; அங்கு செல்வதற்கான விதிமுறைகளும் குறைவு" என்றவர், ஏஜென்ட்கள் மூலம் வெளிநாடுகளில் வேலைக்குச் சேரும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்.
சரியான முகவரா?
"வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவு செய்தபின்பு முதல் நடவடிக்கையாக, சரியான முகவரைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான முகவராக இருந்தால் அவரிடம் கண்டிப்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் எம்.ஓ.ஐ.ஏ. (Ministry Of Overseas Indian Affairs) தரும் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் லைசென்ஸ் நம்பர் இருக்கும். இந்த நிறுவனத்திடம் அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றால் மட்டுமே அயல்நாட்டுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் முகவராகப் பணியாற்ற முடியும்.
சரியான முகவர் யார் என்கிற விவரங்கள் www.poechennai.in என்ற வலைதளத்தில் நமது இந்திய அரசால் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரங்கள், அவர்களின் பணி அனுபவம், முகவர்களின் தரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். சரியானவர்கள் யார் என்ற விவரம் இருப்பதுபோலவே கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்கள் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டிருப்பார்கள். இதை முன்னதாகவே பார்ப்பதன் மூலம் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்களை அணுகாமல் தப்பித்துக்கொள்ளலாம்.
சில முகவர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வேலை வாங்கித் தருபவர்களாக இருப்பார்கள். எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ, அந்த நாட்டு முகவர்களை அணுகும்போது வேலை இன்னும் எளிமையானதாக முடியும். இப்போதெல்லாம் முகவர்கள் அவர்களின் விவரங்களுடன், எம்.ஓ.ஐ.இ.-ன் அங்கீகார எண்களுடன் செய்தித்தாள்களில் விளம்பரங்களை தருகிறார்கள். இதைக் கவனிப்பதன் மூலம் சரியான முகவர்களை எளிமையாக நம்மால் அடையாளம் காணமுடியும்.
நேர்முகத் தேர்வின்போது..!
நேர்முகத் தேர்வின்போது எலெக்ட்ரீஷியன், பிளம்பர் என ஒவ்வொரு வேலைக்கும் டிரேடு டெஸ்ட் இருக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்தமான அல்லது தனியார் டிரேடு டெஸ்ட் சென்டர்கள் இருக்கின்றன. அங்கு வேலைக்குத் தேர்ந்தெடுப்பவர்களின் வேலை தரத்தைப் பரிசோதனை செய்வதற்காக டெஸ்ட்கள் நடத்தப்படும். நமது வளாகத்தில் அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக நேர்முகத் தேர்வை நடத்தும்போது இங்கேயே டிரேடு டெஸ்ட்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
இந்த நேர்முகத் தேர்வின்போது வேலைக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயங்கள் வெளிநாட்டில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு, பணி நேரம், வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, அதிக நேரம் வேலை செய்தால் கூடுதல் சம்பளம் தரப்படுமா, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமா, மெடிக்கல் இன்ஷூரன்ஸ் வசதியை நிறுவனம் செய்து தருமா, விமானப் போக்குவரத்திற்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்கிறதா என்பனவற்றை நன்கு கவனித்த பின்னரே ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து போட வேண்டும். ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு அந்தப் படிவத்தின் நகல் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.
இ.சி.ஆர் (Emigration clearance required)
வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் அவருக்கு தரப்படும் மதிப்பெண் சான்றிதழிலேயே இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று தரப்பட்டுவிடும். ஆனால், பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பி.ஓ.இ. (Protecter of Emigration) அமைப்பிடமிருந்து கண்டிப்பாக இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று வாங்கி முகவர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும். அயல்நாட்டிற்கு செல்லும் சான்றுகள் அத்தனையையும் முகவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் இந்த இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்றையும் அவர்களே வாங்கி தந்துவிடுவார்கள். இந்த இ.சி.ஆர். என்பது 18 நாடுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.
சமர்ப்பிக்க வேண்டியவை!
பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் முன்னனுபவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவேண்டும். அதுதவிர, தங்களது உடல் முழுவதையும் பரிசோதனை செய்து குறை எதுவும் இல்லாதபடி மருத்துவச் சான்றிதழ் ஒன்றையும் முகவரிடம் சமர்ப்பிக்கவேண்டும். இந்த நடைமுறை விஷயங்கள் முடிவுக்கு வந்ததும் விசா எடுப்பதற்கான விஷயங்கள் ஆயத்தமாகிவிடும்.
வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம், எம்ப்ளாய்மென்ட் விசாவில்தான் செல்ல வேண்டும். டூர் விசாவில் சென்றுவிட்டு அங்கு உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்தால் பிரச்னைதான் ஏற்படும். எம்ப்ளாய்மென்ட் விசாவை கையில் வாங்கியதும், அதில் வேலை செய்வதற்கான விவரங்கள் போடப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்" என்று உஷார் டிப்ஸ்களைத் தந்தார் அவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தாங்கள் பணிக்குச் செல்ல விரும்பும் துறைகளில் இரண்டு வருட அனுபவம் இருப்பது நல்லது. 18 வயதைப் பூர்த்தி செய்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இமிக்ரேஷன் தொல்லை இருக்காது. விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் கட்டணம் 450 ரூபாயில் இருந்து 1,015 ரூபாய் வரை (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) வசூலிக்கப்படுகின்றன. இவற்றோடு சேவை வரியும் வசூலிக்கப்படும்.
சேவைக் கட்டணம்!
ஒன்றரை மாதச் சம்பளம் அல்லது அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கும் சேவை கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகையை முகவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர் கட்டணமாக கொடுத்தால் போதுமானது.
ஆக, இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து, வெளிநாட்டில் வேலைக்குப் போனால், எந்த வகையிலும் ஏமாறாமல் பொன்னும் பொருளும் சேர்த்துகொண்டு தாயகம் திரும்பலாமே!
செய்யவேண்டியவையும்… செய்யக் கூடாதவையும்!
அரசு அங்கீகாரம் பெற்ற அயல்நாட்டு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் முகவர்களை மட்டுமே அணுகவேண்டும்.
அயல்நாடு வேலை வாய்ப்பு குறித்த எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, பண பரிவர்த்தனைகளாக இருந்தாலும் சரி, அதற்கான ரசீதுகளை உடனுக்குடன் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.
மெயின் முகவர்களின் உதவியுடன்தான் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு பரிவர்த்தனைகளாக இருந்தாலும் அது இவர்களின் மூலம் நடைபெறுமாறு பார்த்துக்கொள்ளலாம். துணை முகவர்களை நம்பி எந்தவொரு டாக்குமென்ட்களையும், பண பரிவர்த்தனைகளையும் செய்யக் கூடாது. அப்படி செய்வதன் மூலம் கூடுதல் செலவு ஆவதுடன் வேலை கிடைக்க காலதாமதம் ஆகலாம்.
வெளிநாட்டிற்குச் சென்ற பின்னரோ அல்லது வேலை தேடும் சமயங்களிலோ பாஸ்போர்ட் புதுப்பிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
வெளிநாட்டில் எந்த நிறுவனத்தாருக்காக நீங்கள் வேலை பார்க்கச் செல்கிறீர்களோ, அந்த நிறுவனத்தைத் தவிர்த்து கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதற்காக மற்ற நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கக் கூடாது.
வேலை ஒப்பந்த காலத்திற்குள் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்திடமோ அல்லது எந்த முகவரின் உதவியுடன் வெளிநாட்டிற்கு சென்றீர்களோ அவர்களிடமோ தெரியப்படுத்தலாம்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் காலத்தில் எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் ஐ.டி. கார்டுடன்தான் செல்லவேண்டும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதன்படி நடக்கவேண்டுமே தவிர்த்து, முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
எந்த நாட்டில் வேலை செய்து வருகிறீர்களோ, அந்த நாட்டின் வேலைக்கான சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.
உதவிக்கு அணுகுங்கள் !
வெளிநாட்டு வேலை தொடர்பான விளக்கங்களைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: Overseas Manpower Corporation Limited, Government Industrial Training Institute Campus for Women, No.42, Alandur Road, Thiru-vi-ka Industrial Estate, Guindy, Chennai-32.
மேலும், விண்ணப்பங்களை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு 2250 2267, 2250 1538 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணலாம்.
வெளிநாடுகளில் பணிபுரியும்போது உதவிக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை அழைத்துக் கூடுதல் தகவல்களைப் பெறலாம். தாங்கள் அணுகும் ஏஜென்சி நிறுவனம் உண்மையானதா என்று அறிய மேலே சொன்னபடி
www.moia.gov.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல்திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள
www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணுங்கள்.