NEW POST

Pages

Sunday, March 16, 2014

மண் பரிசோதனை செய்வது எப்படி?


விவசாயிகள் அதிக அளவில் விளைச்சல் கிடைக்க பயிருக்கு, பேரூட்டச் சத்துகளான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் இயற்கையில் கிடைக்கும் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் சத்துகள், இரண்டாம் நிலை சத்துகளான கால்சியம், மக்னீசியம் சல்பர், நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான், மாங்கனீசு, மாலிப்டினம், குளோரின் போன்ற 16 வகையான சத்துகள் தேவை.  இச்சத்துகளை முழுமையாக பயிர்களுக்கு வழங்கி தகுந்த நேரத்தில் பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கூடுதல் மகசூல் பெறலாம்.

மண் பிரசோதனையின் நன்மைகள்:

மண்ணின் தன்மையை அறிந்து, பயிர்களுக்கு தேவையான உரத்தை மட்டுமே பயன்படுத்தி செலவினத்தை குறைக்கலாம்.
சுற்றுச் சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம்.
களர், உவர் மற்றும் அமில நிலங்களை கண்டறிந்து அதனை சீர் செய்யலாம்.
மண் மாதிரி எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை:

பரிசோதனைக்காக விவசாயிகள் மண் மாதிரிகளை சேகரிக்கும் போது எரு குழி அருகே உள்ள மண், வரப்பு ஓரத்தில் இருக்கும் மண், மர நிழல் படும் பகுதியில் உள்ள மண், நீர் கசிவு உள்ள இடங்களில் மண் மாதிரிகளை சேகரிக்கக் கூடாது.
மண் மாதிரி எடுக்கும் ஆழம்: நெல், ராகி, கடலை, சோளம் போன்ற சல்லி வேர் கொண்ட பயிர்களுக்கு 15 செ.மீ., பருத்தி, கரும்பு, மிளகாய், மரவள்ளி போன்ற ஆணி வேர் கொண்ட பயிர்களுக்கு 22.5 செ.மீ., மா, தென்னை, மாதுளை போன்ற தோட்டப்பயிர்களுக்கு 3 அடி வரை 3 மண் மாதிரிகளை சேகரிக்க வேண்டும்.
மண் மாதிரிகள் எடுக்கும் இடத்திலுள்ள சருகு, இலை, புல் போன்றவற்றை மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
“வி’ (V) வடிவத்தில் மண்வெட்டியால் குழிவெட்டி, அந்த மண்ணை அப்புறப்படுத்தவேண்டும்.
வெட்டிய குழியின் ஓரமாக குழியின் கீழிருந்து மேலாக இரண்டு புறமும் ஒரே சீராக மண்வெட்டியினால் ஒரு அங்குல கணத்துக்கு மண்ணை வெட்டியெடுத்து ஒரு சுத்தமான வாளியில் போடவேண்டும்.
இதுபோல் ஒரு வயலில் குறைந்தது 5 அல்லது 10 இடங்களில் மண்ணை சேகரித்து ஒன்றாக கலந்து, வேர், தண்டு, கல் போன்றவற்றை அப்புறப்படுத்திக் கொண்டுவரவேண்டும்.
மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்தி, மண்ணை நன்றாக கலந்து சுமார் அரை கிலோ அளவிலான மண்ணை பரிசோதனைக்கு கொண்டு வரவேண்டும்.


Source : தினமணி

No comments:

Designed By Blogger Templates